லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் மதிப்புள்ள லாட்டரிகள்: ரோந்து பணியில் 3 பேர் சிக்கினர்


தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கேரளத்தில் இருந்து வாங்கிவந்து, விற்பனை செய்வது தென்மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. போலீஸார் இதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் லோடு வேனில் கடத்திவரப்பட்ட 2 லட்ச ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

அதிர்ஷ்டம் என்னும் பெயரில் வாழ்வாதாரத்திற்கான வருவாயில் பெரும்பகுதியில் லாட்டரி சீட்டு வாங்கும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கேரள லாட்டரிகளை திருட்டுத்தனமாக வாங்கிவந்து விற்கும் பழக்கம் தென்மாவட்டங்களில் தலைதூக்கியுள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை இருக்கிறது. அதேநேரம், கேரளத்தில் அரசு சார்பிலேயே லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது. அங்கு தீபாவளி, ஓணம் போன்ற முக்கியப் பண்டிகைகளுக்கு மெகா பரிசு லாட்டரியும், மற்ற நாள்களில் தினசரி 75 லட்ச ரூபாய், 80 லட்ச ரூபாய் அளவிலான பரிசுச்சீட்டுகள் அரசு சார்பிலேயே விற்கப்பட்டு, தினசரி குலுக்கல் நடக்கிறது. இந்நிலையில் தென்மாவட்டமான குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த சிலர் குமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் லாட்டரி சீட்டுகள் வாங்கி சப்தமின்றி விற்பனை செய்து வருவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்தவாரம் தூத்துக்குடி மங்களபுரத்தைச் சேர்ந்த மணி என்ற முருகன் லாட்டரி சீட்டு விற்றபோது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தென்காசி மாவட்டம், புளியரையில் உள்ள சோதனைச் சாவடி மூலம் கேரளத்தில் இருந்து லாட்டரி சீட்டுக்களை கடத்தி வந்து, திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து புளியரை காவல் ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் தலைமையில் போலீஸார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகவந்த லோடு வேனில், 4 ஆயிரத்து 620 கேரள லாட்டரிசீட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு இரண்டரை லட்சமாகும்.

இதில் லோடு வேனில்வந்த புளியறை பகுதியைச் சேர்ந்த ராம்குமார்(28), பாட்டாக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன்(36), கேசவபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

x