கடலூரில் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை


கடலூர் / சென்னை: கடலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் ( 43). இவருக்குத் திருமணமாகி, 2 மகள்கள் உள்ளனர். கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், அதிமுக மாவட்டப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் பைக்கில் சென்ற புஷ்பநாதனை, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மகும்பல் வழிமறித்து, ஓட ஓடவிரட்டி வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து தகவலறிந்தபுஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, கடலூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

புஷ்பநாதனுக்கும், அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் உட்கட்சி பிரச்சினையால் அவர் கொல்லப்பட்டாரா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் கைது: இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக கடலூர்வண்டிப்பாளையம் ஆலக்காலனி பகுதியைச் சேர்ந்த நேதாஜி (24),அஜிஸ் (23), வசந்தராயன் பாளையம் பாலன் காலனி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (23) ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

பழனிசாமி இரங்கல்: இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.

பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர்என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. மக்கள் எப்போதும் அச்சத்துடனேயே நடமாடும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில், தான் சட்டம்-ஒழுங்கை சிறப்புற பாதுகாத்து வருவதாக மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.