கோடிகளில் சுருட்டிய பெண் சார்பதிவாளர்: போலி பத்திர முறைகேட்டில் கைது!


சார்பதிவாளர் செல்வசுந்தரி

65 கோடி மதிப்புள்ள நிலத்திற்குப் போலி ஆவணம் தயாரிக்க உதவியதாகவும், அதை முறைகேடான முறையில் பதிவு செய்துள்ளதாகவும் திருப்போரூர் சார்பதிவாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மூட்டுக்காடு பகுதியில் பிரபலமான கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு தென்சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் கிரயம் செய்யப்பட்ட அந்த நிலத்திற்கு, அந்த நிறுவனம் சார்பில் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 65 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுரை என்பவர், அவர் கிரயம் பெற்றது போலப் போலி ஆவணம் தயார் செய்துள்ளார். மேலும் அந்த ஆவணம் தொலைந்து விட்டதாகக் கூறி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர். போலி ஆவணத்தை வைத்து திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த காசி என்பவர் மூலமாகச் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து உண்மை நகலாக புதிய ஆவணத்தைப் பெற்றுள்ளார். அந்த ஆவணத்தை வைத்துக் கடந்த 2020-ல் தனது மகன் ரஞ்சித் குமாருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளார். போலி ஆவணத்தைப் பதிவு செய்வதற்குத் திருப்போரூர் சார் பதிவாளர் செல்வசுந்தரி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

நில உரிமை தங்கள் பெயரிலிருந்து மாற்றப்பட்டதை அறிந்த அந்த தனியார் நிறுவனம், தாம்பரம் பெருநகர காவல் ஆணையர் ரவியிடம் புகார் அளித்தது. இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட காசி மற்றும் அவரது மருமகன் பிரபாகரன், ஆவண எழுத்தர் ரஞ்சித்குமார் ஆகிய மூவரை காவல் துறையினர் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்த சார்பதிவாளர் செல்வகுமாரியிடம் நேற்று விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தாம்பரம் பெருநகர காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். செல்வ சுந்தரி ஏற்கெனவே லஞ்ச வழக்கு ஒன்றில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x