தூக்கத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்ட ரவுடி: அதிகாலையில் வீடு புகுந்து கும்பல் வெறிச் செயல்


சரத் என்கிற பொடிமாஸ்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு பின்புறம் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடியை அதிகாலையில் வந்த ஒரு கும்பல் வெட்டி சிதைத்துக் கொன்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் (23). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு வீச்சு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் புதுவை மாநிலத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தனது மாமா வீட்டில் சரத் உறங்கிக் கொண்டிருந்தார்.

அவர் அங்கு உறங்கிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட ஒரு கும்பல் இன்று அதிகாலையில் திடீரென அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த சரத்தை அரிவாளால் கழுத்து, தலை, முகப் பகுதியில் சரமாரியாக வெட்டி சிதைத்தது. இதில் சரத் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த அரியாங்குப்பம் போலீஸார் சரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் சரத்தை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகிலேயே காவல்துறையினர் பற்றிய அச்சம் இல்லாமல் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x