ராமநாதபுரம் அருகே கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு: 5 கிலோ வெள்ளிக் கவசம் கொள்ளை


கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள பெரிய கருத்தார் அய்யனார் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம், கோயிலில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பெரிய கருத்தார் உடையார் அய்யனார் கோயில் உள்ளது. இன்று (ஜூன் 30) காலை வழக்கம் போல் அய்யனார் கோயிலின் பூசாரி கோயிலை திறக்கச் சென்ற போது கோயில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணம் மற்றும் கோயில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சாமிக்கு சாத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் உள்ளிட்டவைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பாக உத்தரகோசமங்கை காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார், தடவியல் நிபுணர் குழுவினர் திருட்டு நடைபெற்ற கோயில் அலுவலகம், உண்டியல் வைக்கப்பட்டிருந்த சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருட வந்த மர்ம நபர்கள் கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து பீரோவிற்குள் இருந்த உண்டியல் சாவியை எடுத்ததுடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணம், சாமி சன்னதியின் கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று உண்டியலில் இருந்த பணத்தை திருடி உள்ளனர்.

திருடர்கள் தாங்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி மிளாகாய் பொடியை வீசியதுடன், சிசிடிவி காமிராக்கள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் திருடர்கள் கையுறை அணிந்திருந்ததால் உண்டியல், பீரோ உள்ளிட்டவற்றில் கைரேகை எதுவும் பதிவாக வில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பிரசித்தி பெற்ற பெரிய கருத்தார் அய்யனார் கோயிலில் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் சாமியின் வெள்ளி கவசம் திருடுபோன சம்பவம் ராமநாதபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.