சாதிய வன்மத்துடன் செயல்பட்ட என்ஐஎஃப்டி பெண் இயக்குநர் மீது வழக்கு பதிவு!


சென்னை தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னுடன் பணியாற்றும் சக உதவி இயக்குநர் மீது சாதிய வன்மத்துடன் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. (National Institute of Fashion Technology). இந்நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் இயக்குநராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகின்றார். இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக நிர்வாகப் பிரிவு மூத்த உதவி இயக்குநரான இளஞ்செழியனின் அலுவலகம் கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்த அலுவலகத்தை மாணவர் விடுதிக்கு மாற்றி உத்தரவிட்ட இயக்குநர் அனிதா, அந்த அலுவலகத்தை உயர் வகுப்பை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பயன்படுத்த கொடுத்துள்ளார். இதனை எதிர்த்து மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியன் டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியதை அடுத்து டெல்லி அதிகாரிகள் விசாரணை செய்து மீண்டும் பிரதான கட்டிடத்திலேயே அலுவலகம் ஒதுக்க உத்தரவிட்டனர். ஆனால் அனிதா அதை செயல்படுத்தாமல் மூத்த உதவி இயக்குநர் இளஞ்செழியனை அதே விடுதி அலுவலகத்தில் இயங்க வற்புறுத்தியுள்ளார்.

மேலும் அனிதா உள்ளிட்ட இயக்குநர்கள் கார் நிறுத்தும் இடத்தில் இளஞ்செழியன் கார் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், உதவி இயக்குநரின் பதவி உயர்வையும் அனிதா நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து சாதிய வன்மத்துடன் இயங்கி வரும் அனிதா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தரமணி உதவி ஆணையரிடம் இளஞ்செழியன் புகார் அளித்தார். கடந்த 8-ம் தேதி இந்த புகாரின் மீது தரமணி போலீஸார் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்து இரண்டு வார காலமாகியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனிதா கணவர் ரபு மனோகர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பதுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சேவாபாரதி அமைப்பில் தமிழ்நாடு மாநில செயலாளராக உள்ளார். இதனால் காவல் துறையினர் இதுவரை இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அனிதா அளித்த புகாரின் பேரில் இளஞ்செழியன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x