`நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..!'- ஆபாச போஸ்டரால் சிக்கிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்


மக்கள் நீதி மய்யத்தினரால் ஒட்டப்பட்ட சர்ச்சைப் போஸ்டர்

மதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியதால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரும் ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் டிரெய்லர் கூட சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனத்தை மையப்படுத்தி “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! பாத்துக்கலாம்..!” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து மதுரை திடீர்நகர் மற்றும் தெற்குவாசல் காவல் துறையினர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் காவல் துறையினரால் அகற்றப்பட்டது.

x