ராமேஸ்வரம் அருகே உள்ள மீனவ கிராமத்தில் எரிந்த நிலையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 வட மாநில இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (45) என்பவர் கடல் பாசி எடுக்கும் தொழிலுக்குச் சென்றுவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்கச் சென்றுள்ளார். இச்சூழலில், நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல கடல் பாசி சேகரிக்கச் சென்ற சந்திரா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கடற்கரைப் பகுதியில் தீவிரமாக தேடி அலைந்துள்ளனர். நீண்ட நேரம் தேடியும் சந்திரா கிடைக்காததால் ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், வடகாடு கடற்கரையோர காட்டுப்பகுதியில் சந்திராவின் சாப்பாட்டு பாத்திரம், கடல்பாசி சேகரிக்க கொண்டு சென்ற கண்ணாடி, அவரின் புடவை துணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்திருக்கின்றன. தொடர்ந்து காட்டுப்பகுதியில் தேடியபோது முக்கால்வாசி எரிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சந்திரா சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து, சந்திராவுடன் கடல்பாசி எடுக்கச் செல்லும் மீனவ பெண்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நேற்று முன் தினம் இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் சிலர் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாகவும், அவர்களை சந்திரா சத்தம் போட்டது குறித்தும் தெரிவித்தனர்.
இதனைத் தெரிந்து கொண்டு ஆத்திரமடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நள்ளிரவு இறால் பண்ணைக்குச் சென்று பண்ணையை அடித்து நொறுக்கியதுடன், வட மாநில இளைஞர்கள் தான் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகித்து ஆறு பேரையும் சரமாரியாகத் தாக்கினர்.
தொடர்ந்து, ராமேஸ்வரம் போலீஸார் இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட போலீஸார், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினருடன் நள்ளிரவு அங்குவந்த எஸ்.பி கார்த்திக் கிராம மக்களிடமிருந்து வடமாநில இளைஞர்கள் ஆறு பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்திராவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறுகையில்,``தற்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு வடமாநில இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள்தான் குற்றவாளிகளா? சந்திரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுதான் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வட மாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று அக்கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், "ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.