தந்தையை கொடூரமாக கொன்ற மகன்... நள்ளிரவில் கதறிய தாய்: ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கொடுமை


கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற மகனை இரண்டு நாளுக்கு முன்புதான் தந்தை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்றுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ராமு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் ராமு. இவர் பாரதி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் தினேஷ் வேலைக்குச் செல்லாமல் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி ராமுவிடம் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தினால், ராமு மற்றும் அவருடைய மனைவி ரேணுகா இருவரும் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு 2 மணியளவில் மாடிக்கு வந்த தினேஷ் மது போதையில் ரேணுகாவிடம் சண்டையிட்டுள்ளார். உடனே ரேணுகா பால்கனிக்கு சென்று படுத்துவிட்டார். இதையடுத்து தந்தையிடம் வாக்குவாதம் செய்த தினேஷ், வாக்குவாதம் முற்றிய நிலையில் கையில் வைத்திருந்த கத்தியால் ராமுவின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தினேஷ்

சத்தம் கேட்டு மாடிக்கு வந்த ரேணுகா கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டுக் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராமு இறந்ததை உறுதி செய்தபிறகு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள தினேஷை காவல் துறையினர் தேடிவருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து வந்த தினேஷை கடந்த இரண்டு நாளுக்கு முன்புதான் ராமு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். ராமுவின் மகள் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில், மகனே தந்தையைக் கொன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x