டார்ச்சர் செய்த பைனான்ஸ் உரிமையாளர்: வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த சென்னை டிரைவர்!


சென்னையில் கந்து வட்டி கொடுமை காரணமாக வாலிபர் ஒருவர் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் இன்று ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "தனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அதில் டிரைவர் வேலை பார்த்து வந்த இரண்டாவது மகன் கந்தன் (34) மனைவியுடன் தங்களோடு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக கந்தனுக்கு வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் ராஜமங்கலத்தில் உள்ள திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினார். இதுவரை வட்டியுடன் 70 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார். வேலையில்லாத காரணத்தால் கந்தன் பாக்கி தொகையை செலுத்த முடியாமல் போனது. இதனால் திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் வேலு அடிக்கடி கந்தனை தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

பைனானஸ் நிறுவனத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்தது தொடர்பாக நேற்று கந்தன் தன்னிடம் பேசியபோது, ஒரு மாத கால அவகாசம் கேட்குமாறு கூறினார். இந்நிலையில் இன்று காலை திடீரென எனது மகன் கந்தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, கந்தன் செல்போனில் தற்கொலை முன்பு பதிவிட்ட வீடியோ ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் வடிவேலு பணத்தை திருப்பி கேட்டு தகாத வார்த்தையால் திட்ட மிரட்டி வருகிறார். ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கு 15% வட்டி என்ற அடிப்படையில் வாரவாரம் பணம் செலுத்தி வந்தேன். இதுவரை வட்டியுடன் 70 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளேன். பாக்கி 30 ஆயிரம் ரூபாய்க்காக அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ராஜமங்கலம் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x