மும்பையில் தனது 40 வயது காதலியுடன் விடுதியில் தங்கிய 61 வயது முதியவர் திடீரென மரணமடைந்தார். அவர் பாலியல் ஊக்க மாத்திரை உட்கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வொர்லியைச் சேர்ந்த 61 வயது முதியவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் குர்லாவில் உள்ள விடுதிக்கு தனது 40 வயது காதலியுடன் நேற்று வந்து தங்கியுள்ளார். நேற்று முழுவதும் அவர்கள் இருவரும் விடுதியை விட்டு வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென வரவேற்பு அறையை தொடர்பு கொண்டு முதியவர் மூச்சு பேச்சில் கிடப்பதாக அவரது காதலி கூறியுள்ளார். உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்த போது, முதியவர் அரைகுறை ஆடையுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார், இறந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் தங்கியிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து குர்லா காவல் நிலைய அதிகாரி கூறுகையில்," நேற்று காலை விடுதியில் முதியவரும், அவரது காதலியும் சந்தோஷமாக இருந்துள்ளனர். அப்போது முதியவர் போதையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மூச்சு திணறி மயக்கமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், காப்பாற்ற முடியவில்லை. முதியவர் பாலியல் ஊக்க மாத்திரையை உட்கொண்டாரா என்பதைக் கண்டறிய மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.