ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் தருவதாக விளம்பரம் செய்து நூதன மோசடியில் ஈடுபட முயன்ற பிரபல நகைக்கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்நிறுவன கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிறுவனம் பெயரில் வந்த விளம்பரம் ஒன்றில் எங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் வீதம் பத்து மாதம் பணம் தருவதுடன் 2 கிராம் தங்க காசு தருவதாகவும், முதலீட்டாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் திருவண்ணாமலை கிளையில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் உள்ள ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர் வீடுகளில் இன்று காலை முதல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை, ஆரணி, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடப்பதை தொடர்ந்து சென்னையில் அமைந்தகரை, திருமங்கலம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர் நரேஷ் கூறுகையில், "இது போன்ற திட்டம் எங்களது நிறுவனத்தில் இல்லை. எங்களுடைய பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்கிறார்கள். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் உரிய விளக்கம் அளித்துள்ளோம். ஆவணங்கள் ஆய்வுக்காகவே காவல் துறையினர் தற்போது வந்துள்ளனர். அந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை. அது தொடர்பாக பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். பழைய நகைகளை வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட், தங்க நகை கடன், தங்க சேமிப்பு திட்டம் இவற்றை தவிர வேறு எதுமில்லை.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் தருவதாக எந்த திட்டமும் இங்கு இல்லை. எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் காவல்துறையிடம் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். ஆருத்ரா கோல்டு கம்பெனியில் பணம் டெபாசிட் செய்தவர்கள் யாரும் ஏமாறவில்லை" என்றார்.