`உன்னை வீட்டிலேயே வெட்டுவேன்'- கடன் கொடுத்தவரை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்


விமல்

கிராம பஞ்சாயத்திற்கு வாங்கிய ஹார்டுவேர் பொருட்களுக்கான தொகையைக் கேட்ட கடை உரிமையாளருக்கு 80,000 அளவிற்குச் சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடை உரிமையாளரை திமுக பிரமுகர் மிரட்டும் ஆடியோ காஞ்சிபுரம் பகுதியில் வைரலாகப் பரவிவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், திம்மையன்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட கருக்குப்பேட்டை பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். திம்மையன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ என்பவரின் கணவர் விமல். திமுக பிரமுகரான இவர் பஞ்சாயத்துக்குத் தேவையான ஹார்டுவேர் பொருட்களை சுனிலிடமிருந்து 69 ஆயிரம் ரூபாய்க்குக் கடனாக வாங்கி இருக்கிறார். பலமாதங்கள் ஆகியும் கடனை கொடுக்கவில்லை. இதையடுத்து விமலிடம் அடிக்கடி பணத்தைக் கேட்டு போன் செய்து வந்துள்ளார் சுனில். இதனால் ஆத்திரமடைந்த விமல் தன்னுடைய ஆதரவாளர்களை சொத்துவரி கேட்டு சுனில் கடைக்கு அனுப்பியுள்ளார்.

திமுக பிரமுகர் விமல், மனைவி ராஜஸ்ரீ

சுனில் கடைக்கு வந்த திமுகவினர், “80,000 ரூபாய் சொத்து வரி போடப்பட்டுள்ளது. அதைச் செலுத்தவில்லையென்றால் உங்கள் கடைக்குச் சீல் வைப்போம்“ என மிரட்டியுள்ளனர். அப்போது, “இந்தக் கடை வாடகையில் இயங்கிவருகிறது. கடைக்கு இரண்டு வருடம் மட்டும்தான் சொத்துவரி செலுத்தவில்லை. சொத்துவரி கட்ட அதிகபட்சமாக 500 ரூபாய்தான் செலவாகும். 80,000 ரூபாய் அளவிற்கு ஏன் வரியைப் போட்டிருக்கிறீர்கள். வரியை நான் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செலுத்திவிடுகிறேன்” என அவர்களிடம் தெரிவித்துள்ளார் சுனில். இந்த தகவலால் ஆத்திரமடைந்த விமல், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். “பணத்தைக் கொடுக்க முடியாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள். உனக்குப் போட்ட வரியை ஒழுங்கா கட்டு. ஏதாவது பேசுனா வீடு புகுந்து உதைப்பேன். உன்னை வீட்டிலேயே வெட்டுவேன்'' எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ காஞ்சிபுரம் பகுதியில் வைரலாகப் பரவி வருகிறது.

x