ஆந்திராவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் 25 சதவீதம் அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்


ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் ஆந்திர பிரதேசம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல் உள்பட 20 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஏப்ரல் மாதம் விஜயவாடா நகரில் 23 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு அடுத்து ஒரு வாரத்தில் குண்டூர் மாவட்டத்தில் 40 வயது பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். மே 1-ம் தேதி, பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபள்ளே ரயில் நிலையத்தில் 25 வயது கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மே 2- ம் தேதி 2 குழந்தைகளின் தாய் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநில காவல்துறையின் புள்ளிவிவரப்பட்டியல் படி 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 14,603 பதிவு செய்யப்பட்டுள்ளன. அது 2021-ம் ஆண்டில் 17,736 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குற்றவியல் நீதி அமைப்பு வலுப்பெறுவதையே காட்டுகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அர்த்தமில்லை. வழக்குகளைப் பதிவு செய்வதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதிலும் காவல்துறை சரியான நேரத்தில் செயல்படுவதே இதைக் காட்டுகிறது ”என்று கூறியுள்ளனர்.

மேலும்," பெண்களிடம் புகார் அளிக்கும் விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதாலும், சரியான நேரத்தில் போலீஸாரை அணுகுவதற்கு மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், போலீஸார் விரைவாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய முடிந்தது" என்றும் கூறியுள்ளனர்.

x