புலி நகங்கள், பற்களை விற்க முயன்ற மூன்று பேர் கைது @ கூடலூர்


கைதானவர்கள்

கூடலூர்: கூடலூரில் புலி நகங்கள் மற்றும் பற்கள் விற்க முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலருக்கு கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் சிலர் புலி பற்கள், நகங்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. சந்தேகத்திற்குரிய வகையில் ஆமைக்குளம், பால்மேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம், சிமியோன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நடமாடி வந்தனர்.

அவர்களிடம் புலியின் நகங்கள் மற்றும் புலியின் பற்கள் இருப்பது கண்டறிந்த வனப்பாதுகாப்பு படை குழு, அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தது. கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசபிரபு உத்தரவுபடி உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த புலியின் நகங்கள் மற்றும் பற்கள் பறிமுதல் செய்து அவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.