வீட்டு வாசலிலேயே போலீஸ்காரர் மனைவியை பதறவைத்த திருடர்கள்: 27 பவுன் நகையுடன் தப்பியவர் விபத்தில் சிக்கினார்


கைது செய்யப்பட்ட ஆகாஷ்

தலைமைக் காவலராக பணியாற்றி வருபவரின் மனைவியிடம் 27 பவுன் நகையை பறித்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து, தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். இவர் மதுரை மாநகர் காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்து நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் முத்து அணிந்திருந்த 27 பவுன் நகையை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பிச் சென்றுள்ளனர்.

அப்போது, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரையும் டூவீலரையும் பிடித்துக்கொண்டனர். டூவீலரில் வந்த மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, அவனியாபுரம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான காவல் துறையினர் பிடிபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்‌. அவரிடம் இருந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். மேலும், நகையை பறிகொடுத்த முத்துவின் சகோதரரும் அவனியாபுரம் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x