சாலையில் ஓரமாக நடந்து வந்த வாலிபர்கள் மீது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பானசங்கரி அருகே கதிரிகுப்பே சந்திப்பு அருகே 4 வாலிபர்கள் சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் முன் பக்கமாக வந்த கார் மோதி 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதறவைத்துள்ளது.
அதில், சுரேஷ் என்ற நபர் சாலையோரம் நடந்து செல்கிறார். அவர் பின்னால் மூன்று வாலிபர்கள் நடந்து செல்கின்றனர். அப்போது அந்த வழியே மின்னல் வேகத்தில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சுரேஷ் மீது மோதியதில் அவர் அருகில் உள்ள இரு சக்கர வாகனங்கள் மீது தூக்கி வீசப்படுகிறார். பின்னால் நடந்து வந்த மற்ற 3 பேரும் தூக்கி வீசப்படுகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் அருகில் இருந்த மற்றொரு காரின் மீது மோதி நிற்கிறது.
பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர் படுகாயமடைந்த சுரேஷை காப்பாற்றுமாறு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கிறார். பின்னர் விபத்தில் காயமடைந்த நான்கு பேரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், படுகாயமடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் முகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.