‘உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது… பணம் கொடுத்தால் எடுத்து தருகிறோம்’!: மந்திரவாதிகளிடம் ஏமாந்த பெண்!


வீட்டில் புதையல் இருப்பதாக 5 அடி பள்ளம் வெட்டி 75 ஆயிரம் ரூபாய் பெண்ணிடம் மோசடி செய்த போலி மந்திரவாதிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பேதிரியன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி முத்துலட்சுமி. கூலி வேலை செய்கிறார். இவரது மூத்த மகன் சிவகுமார், கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதன் பின் முத்துலட்சுமியின் குடும்பத்தில் தொடர் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் வீட்டிற்கு குறி சொல்ல வந்த மணி என்பவர், உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது. அதை எடுத்துக் கொடுக்க 75 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய முத்துலட்சுமி கடன் வாங்கி அந்த தொகையைத் திரட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி இறுதியில் இரவு நேரத்தில் மணி தனது கூட்டாளிகளான முருகேசன், ராசு ஆகியோருடன் முத்துலட்சுமி வீட்டிற்கு பின்புறம் புதையல் எடுப்பதாக 5 அடி பள்ளம் தோண்டி உள்ளனர். இதன் பின் அவர்கள் பித்தளையில் வாங்கி வந்த நாக சிலை, அம்மன் சிலை, காமாட்சி அம்மன் சிலை, காளி சிலை, செம்பு நாணயங்கள், பித்தளைத் தகடு மற்றும் பூஜை பொருட்களை அந்த குழிக்குள் புதைத்துள்ளனர். இதப் பின் அவற்றைப் புதையல் எடுப்பது போல் எடுத்து முத்துலட்சுமியிடம் தந்துள்ளனர். அவற்றை ஒரு மாத காலத்திற்கு மாட்டுச் சாணம் மற்றும் களிமண்ணிற்குள் மூடி வைக்கவேண்டும் என கூறிவிட்டு 75 ஆயிரம் ரூபாயை மூவரும் வாங்கிச் சென்றுள்ளனர்.

ஒருமாத காலம் கழித்து அந்த சிலைகளை முத்துலட்சுமி சோதித்த போது அவை பித்தளை சிலைகள் என்பதும், மூவரும் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்து மண்டையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தர். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போலி மந்திரவாதிகளான மணி, முருகேசன், ராசு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

x