திருநெல்வேலியில் குவாரி விபத்தில் நான்குபேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் குவாரி உரிமையாளர் செல்வராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து செல்வராஜ் தலைமறைவானார். இந்நிலையில் அவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 14-ம் தேதி இரவு 350 அடி ஆழம் கொண்ட இந்தக் கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தபோது பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது பணியில் இருந்த செல்வகுமார் (30), ராஜேந்திரன் (35), செல்வம் (27), விஜய் (27), ஆயன்குளத்தைச் சேர்ந்த முருகன் (23), மற்றொரு முருகன் (40) ஆகிய தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கினர். இதேபோல் குவாரியில் இருந்து கல் ஏற்றிக்கொண்டிருந்த இரு லாரி, ஜேசிபி இயந்திரங்களும் சேதமாகின. இதில் முதலில் லேசான காயங்களுடன் முருகன், விஜய் இருவரும் மீட்கப்பட்டனர்.
17 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மூன்றாவதாக செல்வம் என்பவர் மீட்கப்பட்டு, நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதேபோல் நான்காவதாக மீட்கப்பட்ட மற்றொரு முருகனும் உயிர் இழந்தார். இந்த விபத்தில் இதுவரை மூன்று தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
மூன்று தொழிலாளர்களின் உயிரைக் குடித்த குவாரி விவகாரத்தில் முன்னீர்பள்ளம் போலீஸார், குவாரி குத்தகைதாரர் சங்கர நாராயணனை ஏற்கெனவே கைது செய்திருந்தனர். தப்பியோடிய குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தேடிவந்த போலீஸார், அவர்களது வங்கிக்கணக்கையும் முடக்கியுள்ளனர். இதேபோல் குவாரி மேலாளர் ஜெபஸ்டியானும் கைது செய்யப்பட்டார். திசையன்விளையில் உள்ள செல்வராஜ் வீட்டை சோதனை செய்ய அதிகாரிகள் சென்றபோதும் அந்தப் பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸாரால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால்தான் உரிமையாளர் செல்வராஜ் தலைமறைவானார். தனிப்படை போலீஸார் அவரைத் தொடர்ந்து தேடிவந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரூவில் செல்வராஜையும், அவரது மகன் குமாரையும் சற்றுமுன் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.