சென்னையில் நடுரோட்டில் கொல்லப்பட்ட பைனான்சியர்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது!


சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் நடுரோட்டில் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பதறவைத்துள்ளது.

சென்னை அமைந்தகரை செனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 18-ம் தேதி மதியம் பட்டப்பகலில் நடுரோட்டில் 6 பேர் கொண்ட கும்பல் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து அமைந்தகரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(36) என்பதும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. வீட்டில் இருந்து அமைந்தகரையில் உள்ள அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் சென்றபோது ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பியோடிய கொலையாளிகளை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை செனாய்நகரை சேர்ந்த ரோஹித் ராஜ் (31), சந்திரசேகர் (28) ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாகி உள்ள 4 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஆறுமுகத்தை ஓட ஓட வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆறுமுகத்தை விரட்டி வந்து, அவர்களது இருசக்கர வாகனத்தை கீழே போட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, மீண்டும் அதே இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சர்வ சாதாரணமாக ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டு கும்பல் தப்பி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x