வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் மதபோதகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் நகரை சேர்ந்த பேராயர் காட்ப்ரேநோபுள். இவர் கடந்த மாதம் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் மதபோதகர் மரியம்செல்வம் என்பவர் தன்னிடம் அறிமுகமாகி, தான் கிரீஸ் நாட்டில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் பணிபுரிந்ததாகவும், தனது மகன் ஈப்ரிம் பிளசனுக்கு கிரீஸ் நாட்டில் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். வெளிநாட்டிற்கு செல்ல முதலில் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற வேண்டுமென கூறி அதற்கு 28 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். பின்னர் விசா பெற 1.45 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மரியசெல்வம் கூறியதால், சந்தேகமடைந்து தனது மகனை மரியசெல்வம் வீட்டிற்கு அனுப்பியதாகவும், அங்கு மரியசெல்வம் வெளிநாட்டிற்கு பலபேரை அனுப்பிய புகைப்படங்களை காண்பித்து தனது மகனை நம்ப வைத்துள்ளார்.
மரியசெல்வத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக இன்னொரு நபரையும் கிரீஸ் நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்து, பல தவணைகளாக மொத்தம் 8.5 லட்சம் வரை மரியசெல்வத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினேன். பணம் பெற்ற உடனே பணி நியமன ஆணை, விசா ஆகியவற்றை மரியசெல்வம் தனக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பணி ஆணை வழங்கி பல மாதங்களாகியும் வேலைக்கு அழைத்து செல்லாததால் சந்தேகமடைந்து, மரியசெல்வம் வழங்கிய பணி நியமன ஆணையை ஆய்வு செய்தபோது அது போலி என தெரியவந்தது. பின்னர் இது குறித்து விசாரித்தபோது, மரியம்செல்வம் பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி நாடு முழுவதும் மோசடி செய்ததும், பல காவல் நிலையத்தில் மரியசெல்வம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் போலீஸில் புகார் அளிக்க போவதாக கூறியதால் மரியம்செல்வம் இரு போலி காசோலைகளை அளித்து ஏமாற்றியதுடன் "சாலையில் செல்லும் பாம்பை மிதித்தால் அது கொத்தி கொன்றுவிடும். அதேபோல நீயும் செத்துவிடுவாய்" என கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை தனக்கு மரியசெல்வம் அனுப்பினார்" என்று குறிப்பிட்டுள்ளார். பேராயர் காட்ப்ரேநோபுள் புகாரில் பெரியமேடு போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகள் பெரியமேடு போலீஸாருக்கு உத்தரவிட்டதன் பேரில் நேற்று பெரியமேடு போலீஸார், பெண் மத போதகர் மரியம்செல்வம் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.