பொதுத்தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன்-சித்ரா தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மகன், வெங்கட்ராமன் (17) திருமங்கலத்தில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17-ம் தேதி கணித தேர்வு நடைபெற்றது. கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாகவும், தான் அப்பாடத்தில் தோல்வி அடைந்து விடுவேன் என்றும் வெங்கட்ராமன், தனது நண்பர்களிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை கூட வெங்கட்ராமன், தனது தாய் சித்ராவிடம், "தான் கணிதத் தேர்வு சரிவர எழுதவில்லை. எனவே, இதில் மதிப்பெண் குறைந்து, நான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்ற அச்சம் உள்ளது" என தெரிவித்துள்ளார். அதற்கு சித்ரா "தேர்வு எழுதியதை நினைத்து கவலைப்பட வேண்டாம். அடுத்த தேர்வுக்கு தயாராகு" என கூறியுள்ளார்.
இச்சூழலில், தந்தை ஆதிநாராயணன் வேலைக்குச் சென்றுவிட, சகோதரி கல்லூரிக்கு சென்றுவிட, தாய் சித்ரா தோட்டத்திற்கு சென்று விட, வெங்கட்ராமன் அடுத்த தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், தோட்டத்தில் இருந்த சித்ரா, தன்னுடைய மகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். வெங்கட்ராமன் செல்போனை எடுக்கவில்லை. இதனால், தனது உறவினரை தொடர்பு கொண்டு, "மகன் வீட்டில் இருந்தால் தோட்டத்திற்கு வரச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார். வீட்டுக்கு சென்ற உறவினர் பூட்டியிருந்த வீட்டு கதவை தட்டி உள்ளனர். வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சித்ராவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பதறிப்போய் வந்த சித்ரா மற்றும் உறவினர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வெங்கட்ராமன் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அலறித் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை இறக்கி இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, திருமங்கலம் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் போரில் வந்த போலீஸார் விடத்தகுளம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், இறந்த மாணவன் வெங்கட்ராமன் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
தேர்வு எழுதிய மாணவன் தேர்வு முடிவு வருவதற்கு முன்பாகவே தான் தோல்வி அடைந்து விடுவோம் என்று எண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விடத்தகுளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதே பள்ளியில் பயின்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தோல்வி பயத்தால் தேர்வு தொடங்கிய நாளன்று தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. தேர்வு குறித்து மாணவர்களிடம் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை எடுத்து கூறினால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்தலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.