பெங்களூரூவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையிலான குட்காவை பறிமுதல் செய்த தஞ்சாவூர் போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் காவல் சரகத்தில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி ஏ.கயல்விழிக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படைகள் அமைத்து குட்கா வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறார். கடந்த வாரத்தில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை திருத்துறைப்பூண்டியில் மடக்கி பிடித்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குட்கா பொருட்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை, தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து காரில் வந்தவர்களிடம் உரிய முறையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு கிடங்கில் குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கிடங்கை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸார், அங்கிருந்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மூன்று டன் அளவுடைய குட்கா பொருட்களையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன்குமார், (21), தஞ்சாவூரை சேர்ந்த பக்காராம் ( 48), முகமத்பாருக் (35), பன்னீர்செல்வம் (40), முத்துப்பேட்டையை சேர்ந்த சோலாராம் (41) மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை டிஐஜி கயல்விழி பார்வையிட்டு, தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்