இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் காயம்பட்டு உயிருக்கு போராடிய நபரை கையில் தூக்கிச் சென்று காப்பாற்ற முற்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன். இவர் இன்று மதியம் இரு சக்கர வாகனத்தில் பெத்தானியாபுரம் பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பைபாஸ் ரோட்டில் தவறான பாதையில் வந்து கொண்டிருந்த டிராக்டர், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கோபாலன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயங்களுடன் துடிதுடித்துக்கொண்டிருந்தவரை பார்த்த அவ்வழியே சென்ற நபர் ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் கைகளால் காயமடைந்தவரை தூக்கி சென்று சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். இவரை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய டிராக்டர் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்த, திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் உரிமையாளர், சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய டிராக்டரை வியாபார நோக்கத்துடன் பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.