தங்கள் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், நிறுவன உரிமையாளருக்கு அனுப்பிய வீடியோவில், “எங்களை போலீஸார் ஒன்றும் செய்ய முடியாது” என்று சவால் விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அம்மனாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த மஞ்சித், நிர்மல் என்ற வாலிபர்கள் ஏப்ரல் 27- ம் தேதி வேலைக்கு சேர்ந்தனர். நிறுவனத்தில் தங்கி வேலை செய்தனர். அவர்களின் ஆதார் மற்றும் புகைப்படத்தை வழங்க கோபி வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில் மஞ்சித், நிர்மல் ஆகிய இருவரும் மே 15-ம் தேதி தங்கள் வேலை செய்த நிறுவனத்தில் இருந்த மினி வேன், அங்கிருந்த வாகனங்களில் இருந்த 50 லிட்டர் டீசல், சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு சாமான்கள், கியாஸ் சிலிண்டர், எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸில் கோபி புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோபிக்கு நிர்மல் மற்றும் மஞ்சித் ஆகியோர் ஒரு வீடியோ அனுப்பியுள்ளனர். மினி வேனில் சென்றபடியே மஞ்சித் பேச, அதை நிர்மல் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவில், “ நாங்கள் பீகாரை நோக்கி செல்கிறோம். எங்களை போலீஸார் எதுவும் செய்ய முடியாது” என்று கூறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்து கோபி அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.