தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மகன்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீஸார் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அதே தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச்சென்று, பெண் காவலர்களே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பெண் காவலர்கள் மூன்றுபேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (45) இவரது வீட்டில் இருந்த பத்து பவுன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்த பிரபாகரன், பக்கத்து வீட்டுப்பெண் சுமதி மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் பெண் காவலர்கள் கல்பனா, உமா மகேஸ்வரி, மெர்சினா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச்சென்று சுமதியை கடுமையாகத் தாக்கினர். தொடர்ந்து விடுவிக்கப்பட்டவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கும் சேர்ந்தார். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனுக்கும் புகார் கொடுத்தார். அவர் விசாரித்ததில், சுமதி மீது வழக்கு பதிவு செய்யாமலும், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்காமலும் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை என்னும் பெயரில் சித்ரவதை செய்தது உறுதியானது.
இதனால் கல்பனா, உமா மகேஸ்வரி, மெர்சினா என்னும் மூன்று பெண் காவலர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார். இதேபோல் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்காத தனிப்பிரிவு ஏட்டு முருகனையும், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளார்.