`உங்களுக்கு அரசு வீடு ஒதுக்கியாச்சு'- போலி ஆணையை கொடுத்து 2.80 கோடி மோசடி செய்த கும்பல் சிக்கியது


வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்தது போல் போலி ஆணை தயாரித்து பொதுமக்களிடம் ரூ.2.80 கோடியை மோசடி செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் சடயங்குப்பத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(53). இவர் தனது நண்பரும் வீட்டு புரோக்கருமான மணலி சின்ன மாத்தூரை சேர்ந்த கலியபெருமாள்(65) என்பவருடன் சேர்ந்து குடியிருப்பு நலச்சங்கம் ஒன்றை நடத்தி வந்தார். அதற்காக அதே பகுதியில் அலுவலகம் ஒன்றை திறந்தனர். பின்னர் அரசு சார்பில் கட்டித்தரப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வீடு வாங்கி தருவதாக திருவொற்றியூர், எர்ணாவூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை உண்மை என நம்பி வந்த பலரிடம் வீடுகள் வாங்கி தருவதாக உறுதியளித்துடன் தலா 10 லட்ச ரூபாய் வரை பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்காக ஒவ்வொரு நபர்களிடமும் தனித்தனியாக முன்பணமாக 1.5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வீடு வாங்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பல் இதுவரை 34 பேரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய்‌‌ முன்பணமாக வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தது போன்று தாசில்தார் கையெழுத்திட்ட போலி ஆணையை தயார் செய்து பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த இசக்கிமுத்து (53), முருகன் (32), சதீஷ் (45), மணலியை சேர்ந்த கலியபெருமாள் (65) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடி வருவதுடன் 2 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

x