அதிர்ஷ்டம் என்னும் பெயரில் வாழ்வாதாரத்திற்கான வருவாயில் பெரும்பகுதியில் லாட்டரி சீட்டு வாங்கும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கேரள லாட்டரிகளை திருட்டுத்தனமாக வாங்கிவந்து விற்கும் பழக்கம் தென்மாவட்டங்களில் தலைதூக்கியுள்ளது. இதில் தூத்துக்குடியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்தபோது ஒருவர் பிடிபட்டார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை இருக்கிறது. அதேநேரம், கேரளத்தில் அரசு சார்பிலேயே லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது. அங்கு தீபாவளி, ஓணம் போன்ற முக்கியப் பண்டிகைகளுக்கு மெகா பரிசு லாட்டரியும், மற்ற நாள்களில் தினசரி 75 லட்ச ரூபாய், 80 லட்ச ரூபாய் அளவிலான பரிசுச்சீட்டுகள் அரசு சார்பிலேயே விற்கப்பட்டு, தினசரி குலுக்கல் நடக்கிறது. இந்நிலையில் தென்மாவட்டமான குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த சிலர் குமரிமாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் லாட்டரி சீட்டுகள் வாங்கி சப்தமின்றி விற்பனை செய்து வருவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில், மாப்பிள்ளையூரணி விலக்கு அருகில், சிப்காட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற முருகன் (52) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 113 வெளிமாநில லாட்டரிகளும், 1500 ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.