விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: வாலிபர்களுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை


மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம்.

கணேசன்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் கொசூர் அருகில் உள்ள மேட்டூர் கிராமத்தில் வசிப்பவர் மாணிக்கம். இவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில் மனநலம் பாதிப்பு காரணமாக கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டிற்கே வந்துவிட்டார். தந்தை வீட்டில் வசித்து வந்த 23 வயதுடைய அந்தப் பெண், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதியன்று விறகு பொறுக்குவதற்காக வயல்வெளிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த கணேசன் (28) மற்றும் முனியப்பன் (23) ஆகிய இருவரும் அவர்களது இரு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி அருகில் உள்ள ஒரு சோளகாட்டுக்குக் கொண்டு சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து சென்றபின், அந்தப் பெண் அழுதுகொண்டே தன் வீடு திரும்பினார். அதனை அடுத்து என்ன நடந்தது என்று பெண்ணிடம் விசாரித்த தந்தை, விவரங்களைத் தெரிந்து கொண்டு உடனடியாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முனியப்பன்

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலாறு மகன் கணேசன், அன்னாவி மகன் முனியப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி நசீமாபானு குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் தலா 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் கட்ட த் தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

x