நெருக்கடி கொடுத்த கடன்காரர்கள்... பணத்தைக் கேட்ட மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற பேரன்!


வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்தச் சொன்ன பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் மீனா(75). பெற்றோர் இல்லாத தனது பேரன்கள் கார்த்திக்( 25), அழகர்சாமி(21) ஆகியோரை பராமரித்து வந்தார். கார்த்திக் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அடிக்கடி தனது பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மீனா வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கிற்கு கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய வட்டிப்பணத்தை கார்த்திக் திருப்பி செலுத்தவில்லை. இதன் கடன்காரர்கள் மீனாவை நெருக்கடி தந்துள்ளனர். இதனால் கடனை அடைக்க மீனா பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது பாட்டி மீனாவின் கழுத்தை நேற்று கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவும், கார்த்திக் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வபுரம் போலீஸார், கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x