ஊரடங்கு உத்தரவை மீறியதாகப் பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து!


ஊரடங்கு நாளில் மதுரை...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கரோனா காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பத்து லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காவல் துறை அதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.

கரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாகப் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன், முதல்வரின் உத்தரவை நிறைவேற்றும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 2019, 2020-ம் ஆண்டுகளில் பதியப்பட்ட பத்து லட்சம் வழக்குகளையும் கைவிடச் சொல்லி, தமிழகக் காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ‘ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பியவர்கள் ஆகியோர் மீது 10 லட்சம் வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளில் காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, முறைகேடான வகைகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது, வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காகக் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் பொதுமக்களின் நலன் கருதி ரத்து செய்யப்படுகின்றன. அந்தந்த மாவட்ட எஸ்.பி-க்கள் வரும் 17-ம் தேதிக்குள் ரத்து செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை காவல் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருகிறது.

x