சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாணு (40) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தன் 17 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமார் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து பாணுவும், முத்துக்குமாரும் தகாத உறவு வைத்துக்கொண்டனர். நாளடைவில் முத்துக்குமார், உன்னுடைய 17 வயது மகள் மீது ஆசை உள்ளதாக பாணுவிடம் தெரிவித்துள்ளார். உடனே பாணு தன் கள்ளக்காதலனுக்கு பச்சை கொடி காட்டியதை அடுத்து கடந்த ஓராண்டாக முத்துக்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் போலீஸில் சிக்கி விடுவோம் என எண்ணி பாணு வீட்டிலேயே வைத்து மகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார் பாணு. பின்னர் சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. திடீரென குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் வேறு வழியின்றி பாணு தனது மகள், குழந்தையை நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள செவிலியர் தாயின் ஆதார்கார்டை கேட்டப்போது பாணு மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும் என செவிலியர்கள் கூறியதால் வேறு வழியின்று பாணு தன் மகளின் ஆதார் கார்டை காண்பிக்கும்போது சிறுமிக்கு 17 வயது என தெரியவந்தது.
உடனே செவிலியர் குழந்தையின் தந்தை யார் என கேட்டதற்கு பாணு தனது கள்ளக்காதலன் முத்துக்குமாரை காண்பித்துள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த செவிலியர் இது குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த இன்னல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நல அதிகாரிகள் இது குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் பாணுவை கைது செய்த போலீஸார் தலைமறைவாக இருந்து கள்ளக்காதலன் முத்துக்குமாரை பொன்னேரியில் வைத்து போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.