38 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: முகநூல் பதிவால் தலைமையாசிரியரை சிக்க வைத்த முன்னாள் மாணவிகள்


கேரளத்தில் தலைமையாசிரியராக இருந்த சிவக்குமார் என்பவர் தான் ஓய்வுபெற்றுவிட்ட செய்தியை முகம் மலர்ந்த சந்தோஷத்தோடு முகநூலில் பதிவிட்டார். ஆனால் அதைப் பார்த்த முன்னாள் மாணவிகள் அவரிடம் பயின்றக் காலத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல் குறித்து அதில் பின்னூட்டங்களாக வரிசைகட்ட, போக்சோ சட்டத்தின் கீழ் சிக்கியுள்ளார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சிவக்குமார்!

கேரளத்தின் மலப்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்தவர் சிவக்குமார். இவர் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். தான் ஓய்வுபெற்றுவிட்ட செய்தியை தன் முகநூல் பக்கத்தில் தன் புகைப்படத்தோடு எழுதியிருந்தார். இதைப் பார்த்த அவரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் பலரும், தாங்கள் குழந்தையாகப் பள்ளியில் படித்தபோது தலைமையாசிரியர் சிவகுமாரின் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக பின்னூட்டங்களை இட்டனர். சிலர் இந்த மிருகம் ஓய்வுபெற்றுவிட்டது என தங்கள் அனுபவத்தை அதனோடு எழுதி ஷேர் செய்யவும் செய்தனர். இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களே சிவக்குமாரின் நிஜமுகத்தை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தினரே சேர்ந்து, சிவக்குமார் மீது மலப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனிடையே அவரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் மினிஷகீர், பீனா ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பையே நடத்தினர். அப்போது அவர்கள், ``தலைமையாசிரியராக இருந்தபோதும், ஆசிரியராக இருந்தபோதும் சிவக்குமார் பல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். 9 முதல் 12 வயதுவரையுள்ளக் குழந்தைகளைத் தான் குறிவைப்பார். இவரது நடத்தையால் இருமாணவிகள் படிக்கும்போதே தற்கொலை முயற்சிவரை செய்தனர். அதில் ஒருமாணவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துதான் மீண்டு வந்தார். பள்ளிக்கூடம் அவரைக் கண்டிக்கவே இல்லை. பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த கன்னியாஸ்திரியிடம் மாணவிகள் முறையிட்டால் அவர்களும் அதை பொருட்படுத்தாமல் இருந்தார்கள்” எனவும் குற்றம்சாடினர். இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சிவக்குமார்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடந்து சிவக்குமார் தலைமறைவானார்.

சிவக்குமார் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார். அவர் இம்முறை மூன்றாவது முறையாக கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தார். போக்சோ சட்டத்தில் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியும் அவரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

x