கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரின் தாயார், தனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனைக் கைதிகளுக்கு உரிமையில்லை’ என உத்தரவிட்டுள்ளார்கள்.
சென்னை சைதாப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எம்.கே.பாலன். பின்பு அதிமுகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த இவர், 2000-ம் ஆண்டு மந்தைவெளியில் உள்ள தனது வீட்டின் அருகே நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கொலை செய்தது அம்பலமானது. இந்த வழக்கில் சோமு, பாலமுருகன், ஹரிஹரன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரின் தாயார் சரோஜினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளைத் தமிழக அரசு விடுவித்தது. இந்த அரசாணையைப் பயன்படுத்தி தனது மகனையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதாரர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் நன்னடத்தை விதியை அவர் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து ‘முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை’ என நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.