ஒடிசாவில் முன்னாள் சுயேச்சை எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 70 லட்ச ரூபாயும், 133 கோடி ரூபாய்க்கான வங்கி டெபாசிட் ஆவணங்களும் சிக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒடிசாவின் சம்புவா சட்டப்பேரவை தொகுதி முன்னாள் சுயேச்சை எம்எல்ஏ ஜிதேந்திரநாத் பட்நாயக். இவர் மீது சுரங்க முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், அரசுக்கு ரூ.130 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜிதேந்திரநாத் பட்நாயக் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சொத்து ஆவணங்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது ரூ.133 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் ரூ.70 லட்சம் பணம் மற்றும் ரூ.133.17 கோடி மதிப்பிலான வங்கி டெபாசிட்டுகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.