மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறை: கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தன் சொந்த மகளை பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கி, குழந்தைக்கு தாயாக்கிய கொடூர தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளத்தின் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்துவந்தார். இவர் தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 7-ம் வகுப்புப் படிக்கும் தன் சொந்த மகளை பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கி, கர்ப்பமாக்கியதாக கடந்த 2017-ம் ஆண்டு காட்டாக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதை வெளியில் சொல்லக் கூடாது என தன் மகளை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்டவரின் மனைவியின் சகோதரி மூலமே இந்த தகவல் வெளியில் தெரியவந்தது. தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவின் முன்பு பாதிக்கப்பட்ட குழந்தை இவ்விசயத்தை வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 7-ம் வகுப்பு படித்துவந்த அந்த மைனர் பெண், மாவட்ட குழந்தைகள் நலத்துறையால் பராமரிக்கப்பட்டார். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி அந்த மைனர் பெண்ணிற்குக் குழந்தை பிறந்தது. டி.என்.ஏ சோதனையில் அந்தக் குழந்தை, அந்த பெண்ணுக்கு அவரது தந்தையின் மூலமே பிறந்ததும் நிரூபிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெய்யாற்றங்கரை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி உதயகுமார் அதிரடி தீர்ப்பினைக் கொடுத்துள்ளார். அதன்படி பெற்ற மகளை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மைனர் பெண்ணை மீண்டும், மீண்டும் பாலியல் வன்மம் செய்தது, கர்ப்பமாக்கியது, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்மம் செய்தது, போக்சோ சட்டப்பிரிவு, நெருங்கிய ரத்த உறவில் இருந்துகொண்டே பாதுகாவலரே எல்லை மீறியது என பல குற்றங்களுக்கும் சேர்த்து 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 18 வயது பூர்த்தியடையாத மைனர் குழந்தையைக் கர்ப்பமாக்கியதற்காக தனியாக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அபராதத் தொகையில் 4 லட்சத்தை தன் மகளுக்கு, அதாவது பாதிக்கப்பட்டவருக்கே இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உதயகுமார் தன் தீர்ப்பில் கூறியுள்ளதால் குற்றச்செயலில் ஈடுபட்டவர் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மைனர் பெண் அடையாளப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் குற்றசெயலில் ஈடுபட்ட அவரது தந்தையின் பெயரும் நீதித்துறையால் வெளியிடப்படவில்லை.

x