குடிபோதையில் தினம்தினம் தகராறு செய்து வந்த கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரின் மனைவி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர், வேலாப்பாடியை சேர்ந்தவர் குமரவேல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்தார். வேலையிழப்பு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த குமரவேல், படிப்படியாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாகவே இவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. கோமதியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ச்சியாக சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி மனைவியிடமும், மகள்களிடமும் குமரவேல் சண்டையிட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல நேற்று இரவு குடிபோதையில் கோமதியிடம் தகராறு செய்துள்ளார். சிலமணி நேரங்களாகவே அவர்களுக்குள் வாய்த்தகராறு நடைபெற்று வந்திருக்கிறது. ஆத்திரமடைந்த குமரவேல் வீட்டிலிருந்த கத்தியால் கோமதி நெற்றி மற்றும் கழுத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து குமரவேல் கையிலிருந்த கத்தியை பிடுங்கிய கோமதி, அவரின் கழுத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் குத்தியுள்ளார். ரத்தம் பீறிட்ட நிலையில் குமரவேல் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
மனைவி கோமதியும், அவரின் மகளும் செய்வது அறியாமல் கதறி அழுதுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு குமரவேல் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். குமரவேலின் உடலைக் கைப்பற்றிய வேலூர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். கணவனுடன் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த கோமதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘மது உயிருக்குக் கேடு’ என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன!