கல்லூரி வளாகத்திலேயே கஞ்சா: வீடியோ எடுத்து மாணவர்களைச் சிக்க வைத்த பேராசிரியர்!


சென்னையில் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் கஞ்சா குடிப்பதை வீடியோ எடுத்து பேராசிரியர் ஒருவர், காவல்துறைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் மாநிலக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகம் அருகே மூன்று மாணவர்கள் கஞ்சா குடித்துக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புவியியல் துறை பேராசிரியர் வாசுதேவன், மாணவர்கள் கஞ்சா குடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். பின்னர் அந்த வீடியோவை அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து போலீஸார், கல்லூரிக்கு விரைந்து சென்று கஞ்சா குடித்த மூன்று மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், இரண்டாம் ஆண்டு மாணவன் சுனில் குமார்(21), முதலாம் ஆண்டு மாணவன் தினேஷ் குமார்(19), தனுஷ்(19) என்பது தெரியவந்தது. இவர்களிடம் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கஞ்சா குடித்து மாணவர்கள் சிக்கியிருப்பது மாநிலக்கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x