கன்னியாகுமரி மாவட்டம், மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் இருந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஆனால் இது தற்செயலான சம்பவம் அல்ல. ஆன்லைன் ப்ரிபயர் விளையாட்டால் நிகழ்ந்திருக்கக் கூடும் என பொதுமக்கள் சந்தேகிப்பதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக காமதேனு இணையத்திடம் பேசிய தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, “கேரளத்தின் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த நிஜிபூ. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது இரண்டாவது மகன் ஆதில் முகமது(12) 7-ம் வகுப்பு படித்துவந்த ஆதில் முகமது, குமரிமாவட்டம், திட்டுவிளையில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு தன் அம்மாவோடு வந்திருந்தார். கடந்த 6-ம் தேதி மதியம், ஆதில் முகமது வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பூதப்பாண்டி போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் திட்டுவிளை அருகே உள்ள மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சிறுவன் ஆதில் முகமது சடலமாக மீட்கப்பட்டார். அந்த குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் தான் முதலில் பார்த்தனர். முதலில் ஆதில் முகமது குளத்தில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சிறுவனின் தாய், சுஜிதாவும் தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார்.
ஆனால் இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமே செல்போன் ஆன்லைன் ப்ரிபயர் விளையாட்டுத்தான் என அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும் நபர் ஒருவர் சிறுவனை குளம் நோக்கி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் விளையாட்டில் எப்போதுமே தோற்கும் ஒரு நபர், ஆதில் எப்போதுமே ஜெயிப்பதால் தாழ்வு மனப்பான்மையினால் இச்சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் சந்தேகம் வருகிறது. மாணவர் ஆதில் முகமது மரணத்திற்கு ஆன்லைன் விளையாட்டுத்தான் காரணமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை அந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும். திமுக அரசு, முந்தைய அதிமுகவைப்போல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்றார்.