சுற்றி வளைத்த போலீஸ்... பெட்ரோல் குண்டு வீசி தப்பிய கொள்ளை கும்பல்: அதிர்ச்சி பின்னணி


ஆலையின் உள்ளே

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கொள்ளையடிக்க வந்த கும்பலை சுற்றி வளைத்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது. சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட அந்த எண்ணெய் ஆலை நிர்வாக காரணங்களால் பாதியிலேயே மூடப்பட்டு விட்டது. பரந்து விரிந்த அந்த ஆலையில் இரும்பு உள்ளிட்ட பல தளவாடப் பொருட்கள் இருந்தன. ஆலையில் போதிய காவலாளிகள் இல்லாத நிலையில் ஆலையில் உள்ள பொருட்களை ஒரு சில கும்பல்கள் தொடர்ந்து திருடி வந்தனர்.

இதுகுறித்து ஆலை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் விளைவாக ஆலையில் திருட வந்தவர்களின் 70 இருசக்கர வாகனங்கள், 7 மினி லாரிகள் ஆகியவற்றை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். அப்படியும் திருடர்களை பிடிக்க முடியவில்லை, திருட்டையும் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து திருட்டுப்போன வண்ணமே இருந்தது.

பெட்ரோல் குண்டு

இந்த நிலையில் நேற்று இரவு 50 பேர் கொண்ட ஒரு கும்பல் ஆலையில் உள்ள பொருட்களைக் கொள்ளை அடிப்பதற்காக ஆலைக்குள் புகுந்தது. ஆலையில் கொள்ளை முயற்சி நடப்பதை அறிந்த கடலூர் மாவட்ட போலீஸார் விரைந்து வந்து ஆலையை சுற்றி வளைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையர்களை பிடிப்பதற்காக நெருங்கி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் போலீஸார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசத் தொடங்கினர். இதில் பல குண்டுகள் தரையில் பட்டு தெறித்து பற்றி எரிந்தன. இப்படி மொத்தம் 6 பெட்ரோல் குண்டுகளை வீசியக் கொள்ளைக் கும்பல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

எனினும் பெட்ரோல் குண்டுகள் எரிந்ததில், போலீஸார் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த கொள்ளை கும்பலை தேடும் பணியை போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீஸார் கொள்ளைக் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பெரும் திருட்டுக் கூட்டம் இப்படி கொள்ளையடிக்க கிளம்பியிருப்பதும், தங்களை பிடிக்கவந்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பியிருப்பதும் பொதுமக்கள் மற்றும் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x