குடும்ப வறுமை காரணமாக பிறந்து 5 நாளே ஆன குழந்தையை 5 ஆயிரம் ரூபாய்க்கு தாயே விற்ற சோக சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. நம்பிராஜன் கூலி வேலை செய்கிறார். சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சந்திராவிற்கு மே 5-ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை காரணமாக தனக்குப் பிறந்த குழந்தையை தன்னுடன் பணியாற்றும் ஜெயந்திக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு சந்திரா விற்றுள்ளார்.
இந்த விஷயம் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸூக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெயந்தியிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகள், போலீஸார் சந்திராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வறுமை காரணமாக தனது குழந்தையை விற்றதாக சந்திரா தெரிவித்தார். தமிழகத்தில் வறுமை காணமாக பெற்ற குழந்தையை தாயே விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.