மார்பிங் வீடியோ, புகைப்படங்கள் அனுப்பி மிரட்டி இளைஞரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு @ சென்னை


பணம் பறிப்பு

சென்னை: சென்னையில், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி இளைஞரிடம் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்துள்ளது.

அதில் ராகேஷ் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். சற்று நேரத்தில் அதே எண்ணில் இருந்து வாட்ஸ் அப் காலில் பேசிய நபர், “இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளார்.

பயந்து போன ராகேஷ் அந்த நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு, மிரட்டிய அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராகேஷ் இதுகுறித்து டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.