`தாலியைக் கழட்டும்போது நான் இருக்க மாட்டேன்'- காதல் மனைவிக்கு வீடியோ அனுப்பி உயிரை மாய்த்த கணவன்


"நான் கேட்ட தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு. ஏனென்றால் அந்த தாலியைக் கழட்டும் போது நான் இருக்க மாட்டேன்” என்று மனைவிக்கு வீடியோ அனுப்பி உயிரை மாய்த்துள்ளார் கணவர்.

சென்னை ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்த மதன் என்பவர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பங்கேற்று 2-ம் இடத்தைப் பெற்றார். கடந்த 4 மாதங்களாக சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படைக் காவலராக பணியாற்றி வந்த மதன், 5 ஆண்டுகளாக ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது. தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, ஹேமலதாவின் உயர்படிப்பு தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரச்சினை அதிகரிக்கவே, மதனிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ளார் ஹேமலதா. இந்நிலையில், வீடியோ ஒன்றை ஹேமலதாவிற்கு அனுப்பி வைத்துள்ளார் மதன். அந்த வீடியோவில், “தான் உயிரோடு இருக்கும் வரை விவாகரத்துக் கொடுக்க மாட்டேன். நான் இருப்பதால் தான் உன் படிப்பிற்கு பிரச்சினை. இனி என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. உன் அம்மா வீட்டில் நீ எப்படி சந்தோஷமாக இருந்தியோ அப்படியே நீ நிம்மதியாக இருக்கலாம்.

நான் கேட்ட தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு. ஏனென்றால் அந்த தாலியைக் கழட்டும் போது நான் இருக்க மாட்டேன்” என்று உருக்கத்துடன் பேசியுள்ளார். அந்த வீடியோவை தன் மனைவிக்கு அனுப்பிய பிறகு மதன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன்- மனைவியிடையே நடந்த தகராறில் கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x