‘எங்க தலைவனைப் போட்டுக் கொடுத்தியா'?: விசாரணை கைதிக்கு சிறையில் நடந்த கொடுமை!


வெள்ளை காளி செல்போன் வைத்திருந்ததை அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்தாக கூறி விசாரணையை கைதியை கோவை சிறையில் வைத்து சக கைதிகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மன்சூர் அலி அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு படிப்பதற்காக புத்தகம் எடுக்க மூன்றாம் பிளாக்கிற்குச் சென்றார். அப்போது, " வெள்ளை காளி என்ற கைதி செல்போன் வைத்திருந்ததை, நீ தான் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தாயா?" எனக்கேட்டு சிவக்குமார், அன்னப்பாண்டி, ஷேக் முகமது, முனியாண்டி, பிரவீன்குமார் ஆகிய கைதிகள் மன்சூர் அலியை தாக்கினர். இதில் மன்சூர் அலிக்கு மண்டை உடைந்தது. உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகார்பேரில், மன்சூர் அலியை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த அவர்கள் திருப்பூரில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளை காளியும் மதுரையைச் சேர்ந்த ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

x