`டெண்டருக்கு 0.5%-ம்; பணி தொடங்கினால் 12% கமிஷன் தரணும்'- சிக்கிய நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர்


‘டெண்டர் எடுத்தா 0.5 சதவீதம், பணி தொடங்கினால் 12 சதவீதம் என ‘கமிஷன்’ நிர்ணயித்து வசூலில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (54). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஆத்தூர் அருகே தெடாவூர் முதல் தம்மம்பட்டி செல்லும் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்கான டெண்டர் இந்த அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த டெண்டர் மொத்தம் ரூ. 6 கோடியே 5 லட்சம் மதிப்புடையதாகும். இதனை சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா வீரகனூரைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர் சுந்தரராஜ் (60) என்பவர் எடுத்துள்ளார். இதற்காக 0.5 சதவீதம் என ரூ.3.50 லட்சம் ‘கமிஷன்’ தரவேண்டுமெனவும், பணி தொடங்கியுடன் 12 சதவீதம் என மொத்தம் ரூ.78.53 லட்சம் ‘கமிஷன்’ தரவேண்டும் என உதவி இயக்குநர் சந்திரசேகர் கேட்டுள்ளார்.

என்னாது ரூ.78.53 லட்சம் கமிஷனா? பகல் கொள்ளையா இருக்கே என மலைத்துப் போன ஒப்பந்தக்காரர் சுந்தரராஜ், உதவி இயக்குநர் சந்திரசேகரின் ‘கமிஷன், கரப்சன்’ பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று மாலை முதல் கட்ட கமிஷன் தொகை ரூ.3.50 லட்சம் ரொக்கத்துடன் (அத்தனையும் ரசாயனம் தடவிய நோட்டுகள்) வந்த சுந்தரராஜ், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வைத்து உதவி இயக்குநர் சந்திரசேகரிடம் அத்தொகையை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சந்திரசேகரனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு ரூ.83 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

x