முன்விரோதம், தொழில் போட்டி: அடுத்தடுத்து கொல்லப்பட்ட ரவுடிகள்


கொலை

பொன்னேரி பகுதியில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடியை தொழில் போட்டி காரணமாக சக ரவுடிகளே வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பார் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் திணறிக் கிடக்கிறது திருவள்ளூர்.

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஜவகர். நேற்று இரவு உறவினர் சீகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளம் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த போது திடீரென வழிமறித்த கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜவகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய சீகனை பொன்னேரி காவல்துறையினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சீகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார்.

கொலை

ரவுடி ஜவகர் மீது இரண்டு கொலை வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் உள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா, நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இதே வழக்கில் அவரது நண்பர் கார்த்திக் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஜவகருக்கும் அவரின் நண்பர் ஒருவருக்கும் சில ஆண்டுகளாக முன்விரோதம் அதிகரித்து வந்தது. இருவருக்குமிடையே அடிக்கடி கோஷ்டி மோதலும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜவகர் கொல்லப்பட்டுள்ளதற்கு முன்விரோதமும் காரணமாக இருக்கக் கூடும் என காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். இந்த கொலை நடந்து பரபரப்பு அடங்குவதற்குள் திருவெள்ளவாயல் பகுதியில் பார் உரிமையாளர் ஒருவர் இன்று காலை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

மீஞ்சூர் வாயலூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி மூர்த்தி என்பவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. திருவெள்ளவாயல் பகுதியில் பார் நடத்திவரும் மூர்த்தி வழக்கம் போல இன்று பாருக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்தது. அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்ற மூர்த்தியைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில், சம்பவ இடத்திலேயே மூர்த்தி பலியானார். இதைக் கண்டதும் பாரில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதையடுத்து காட்டூர் போலீஸார் மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பார் எடுப்பதில் தொழில் போட்டி காரணமாக மூர்த்திக்குச் சிலருடன் முன்விரோதம் இருந்துள்ளது. அதுவும் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

x