கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் புட் பாய்சன் ஏற்பட்டு தேவானந்தா என்னும் 16 வயது மாணவி சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் வயநாட்டில் புட் பாய்சன் ஏற்பட்டு 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று கடையில் மீன்வாங்கி வீட்டில் தயாரித்து சாப்பிட்ட நான்கு பேர் ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தை உலுக்கிய சம்பவங்கள்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 23 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவினர் கடந்தவாரம் வயநாட்டிற்கு இன்பச் சுற்றுலா வந்தனர். இவர்கள் மாவட்டத்தில் மூன்று உணவகங்களில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதில் எந்த உணவகத்தில் சாப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தியது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களில் 18 பேருக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவச் சோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவு புட் பாய்சன் ஆகியிருப்பது தெரியவந்தது.
இதேபோல் கடந்தவாரம் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த நிலையில் இன்னும் 49 பேர் மருத்துவ, வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இந்தவாரத்தில் மட்டும் மளப்புரம், கொல்லம் மாவட்டங்களிலும் புட் பாய்சன் விவகாரங்கள் பதிவாகியிருப்பதாகவும், இருந்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையான மீன்!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜூ என்பவர் உள்ளூர் மீன்கடையில் குதிரை கானாங்கெழுத்தி மீன் வாங்கியுள்ளார். அதை குடும்பத்தோடு சமைத்து நேற்று சாப்பிட்டார். நேற்று இரவே முதலில் பிஜூவின் மனைவிக்கு வயிற்று வலி வந்தது. தொடர்ந்து பிஜூ அவரது இருமகள்களுக்கும் வயிற்று வலி வரவே 4 பேரும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் மீன் வாங்கிச் சென்ற இன்னொருவர், தனது மீனில் புழுக்கள் இருப்பதாக சுகாதாரத்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து திருவனந்தபுரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.