அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தம்பதி கொன்று புதைப்பு: கார் ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது


அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வயதான தம்பதியைக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த கார் ஓட்டுநர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதி

சென்னை மைலாப்பூர் துவாரகா மகாலட்சுமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(60). இவரது மனைவி அனுராதா(55). ஆடிட்டரான ஸ்ரீகாந்த் தனது மனைவி அனுராதாவுடன் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள தனது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றனர். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்த இருவரும் நேற்று அதிகாலை விமானம் மூலமாக சென்னை திரும்பினர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து தங்களிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் காரில் மயிலாப்பூர் வீட்டிற்கு வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள மகள் சுனந்தா தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்களது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், அடையாறு இந்திரா நகரில் வசிக்கும் தனது உறவினர் திவ்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் தனது கணவர் ரமேஷூடன் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. இதைக் கண்டு சந்தேமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் வீட்டில் இல்லை எனத் தெரிய வந்தது. மேலும் தம்பதி கொண்டு வந்த பெட்டிகள் திறந்தபடி இருந்ததுடன் வீட்டின் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.


இதனையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திவ்யா புகார் அளித்தார். இதன் பேரில் மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார், கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர் அவரது செல்போன் டவரை வைத்து ஆந்திரா மாநிலம் ஓங்கோல் சோதனைச் சாவடி வழியாக காரில் சென்ற ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரையும் மைலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, பீரோவில் இருந்த சுமார் 20 லட்ச ரூபாய் பணம், நகைகளை கொள்ளையடித்து கொண்டு நண்பரின் உதவியுடன் நெமிலிச்சேரி பகுதியில் அவர்களது பண்ணை வீட்டில் இருவரது சடலத்தையும் புதைத்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொலை செய்து புதைக்கப்பட்ட வயதான தம்பதி உடலை போலீஸார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரிடம் மயிலாப்பூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x