"மதம் மாறி காதலித்ததால் திருமணத்துக்கு முன்பே எனது சகோதரர் என்னைத் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்ய முயன்றார்" என ஹைதராபாத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டியலினத்தை சேர்ந்த நாகராஜ், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அஷ்ரின் சுல்தானா ஆகியோர் காதலித்து ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. இதனையும் மீறி அவர்கள் திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் வாடகை வீட்டில் வசித்துள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாயன்று சுல்தானா சகோதரர் சையது மொபின் மற்றும் அவரது நண்பர் மசூத் அகமது ஆகியோர் நாகராஜை கடுமையாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இந்த ஆணவக் கொலை வழக்கில் தற்போது சையது மொபினையும், மசூத் அகமதையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சுல்தானா பேசுகையில், "மதம் மாறி நாகராஜை காதலித்தது எனது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, எனது சகோதரர் சையது மொபின் தொடர்ந்து என்னை எச்சரித்து வந்தார். வீட்டிலேயே என்னை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ய முயன்றார். அப்போது எனது பெற்றோர் என்னை காப்பாற்றினர். நாகராஜுடன் திருமணமானதும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தோம்" என்று கூறினார்.