`உங்கள் தந்தையின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்'- தொழிலதிபரை பதறவைத்த திருட்டு ஊழியர்


தொழிலதிபர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகை, மற்றும் 2 லட்சம் பணத்தை திருடி சென்ற ஊழியர், காவல் துறையிடம் சென்றால் உங்கள் தந்தையின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டல் கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் பிஹார் ஊழியரை தேடி வருகின்றனர்.

சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் விகாஷ்முனோத் (46). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விகாஷ் பிஹாரை சேர்ந்த கரண் (22) என்பவரை வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளார். இரண்டு மாதங்களாக வீட்டில் வேலை பார்த்து வந்த கரண் கடந்த 2-ம் தேதி வேலையை விட்டு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை தொழிலதிபர் விகாஷ் முனோத் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகை மற்றும் 2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

மேலும் அந்த பீரோவில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், உங்கள் தந்தை லால் முனோத்தின் வீடியோ சிடி ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், வீடியோவை வைத்து மிரட்டி உங்களிடம் பணம் பறித்து இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. காரணம் உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தேவையானதை எடுத்து செல்கிறேன். காவல் நிலையத்திற்கு சென்றால் தந்தையின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்" என குறிப்பிட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விகாஷ், இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வீட்டில் இருந்த 1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகை, 2 லட்சம் திருடு போனதாகவும், தனது வீட்டில் வேலை பார்த்து வந்த பிஹார் வாலிபர் கரண் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த போலீஸார் வீட்டில் இருந்த கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்துடன் தப்பி ஓடிய ஊழியர் கரணை தேடிவருகின்றனர்.

x